தமிழகத்துக்காக ஜனாதிபதி ‘செய்த’ முதல் காரியம்..!
டெல்லி: தமிழக சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
சார் பதிவாளர்கள் அலுவலகங்களின் மூலமாக வீடுகள், நிலங்கள் உள்ளிட்டவற்றை சொத்துக்களாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்போது போலியான சில ஆவணங்கள் மூலம் சொத்துகள் பதிவு செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் நடக்கின்றன.
இதுபோன்ற மோசடி சம்பவங்களில் பதிவாளர் அலுவலகங்களில் உள்ள உயரதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட தருணங்களில் பாதிக்கப்பட்ட பலரும் நீதி வேண்டி கோர்ட்டை நாடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இத்தகைய பிரச்னைகளுக்கு எல்லாம் கடிவாடும் போடும் வகையில் தமிழக சட்டசபையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் சொத்தை பதிவு செய்தால் அந்தந்த மாவட்ட பதிவாளரே உரிய விசாரணை நடத்தி தீர்வு காணலாம்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதல் கோரி டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந் நிலையில் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விவரத்தை தமிழக வணிகவரி அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த சட்ட திருத்தத்தின் மூலம் இனி மோசடியாக, போலியான ஆவணங்களை கொண்டு சொத்துகள் பதிவு செய்தால் மாவட்ட பதிவாளரே உரிய விசாரணை நடத்தி தீர்வை எட்டலாம்.