15… 10… அப்புறம் 9…?
சென்னை: அதோ, இதோ என்று பேச்சுவார்த்தையில் இருந்த பாமக, பாஜக கூட்டணி கிட்டத்தட்ட இறுதி வடிவத்துக்கு வந்துவிட்டதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தல் தேதி எந்நேரத்திலும் அறிவிக்கப்படலாம். அனேகமாக மே 2வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் பரபர கூட்டணி கணக்கை போட்டு வருகின்றன.
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் கிட்டத்தட்ட கூட்டணியை முடிவு செய்து, வேட்பாளர்கள் பட்டியலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. ஆனால், பாமகவின் நிலை என்பது தெரியாத நிலையிலேயே இருந்தது.
இந் நிலையில், தற்போது பாமக, பாமகவும் கூட்டணியை இறுதி செய்து விட்டதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றன. அதற்கான final touch சென்னையில் நேற்று நடந்துவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அன்புமணி ராமதாசை தனிப்பட்ட முறையில் ஒரு முக்கிய நபரின் வீட்டில் சந்தித்து கூட்டணியை இறுதி செய்துவிட்டார் என்பது தான். தொகுதிகள் எத்தனை என்றும் முடிவாகி விட்டதாம்.
தொடக்கத்தில் 15 தான் என்று விடாப்பிடியாக இருந்திருக்கிறது பாமக. காரணம், கூட்டணியில் அதிமுக இல்லை என்பதால். பின்னர் 10 ஆக மாறி, 9 என்று முடிவாகி விட்டதாம். இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி கூடிய விரைவில் முடிவை அறிவிப்பதாக பாமக அறிவித்துள்ளதாம்.
9 மக்களவை தொகுதிகள் போக… ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவியும் உள்ளதாம். பிரதமர் மோடியின் தமிழகம் வருகையின் போது, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மேடையேற உள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்தக்கட்ட தேர்தல் பணிகள் துவங்கும் என்கின்றனர் அனைத்தும் அறிந்தவர்கள்.
அதிமுகவுக்கு காத்திருப்பது அவசியம் இல்லை, கருத்துக்கணிப்புகள் நமக்கு சாதகம் என்று பாஜக புத்துணர்ச்சியாக இருப்பதாகவும், தேர்தல் முடிவுகளில் இது எந்தளவு கை கொடுக்கும் என்று தெரியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.