மக்கள் ‘அதிர்ச்சி’…! ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்கும் தமிழக அரசு..?
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கலாம் என்று தமிழக அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு நடவடிக்கை ஓரளவு பலன் தந்திருந்தாலும் தொற்று பாதிப்பை இன்னும் குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
தற்போது உள்ள ஊரடங்குக்கு பிறகு என்ன பண்ணலாம் என்பது குறித்து தலைமை செயலாளர், டிஜிபி, சுகாதாரத்துறை உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் பல்வேறு முக்கிய விஷயங்களை மருத்துவ வல்லுநர்கள் குழுவானது தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. முக்கியமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு உள்ளது.
வெகுவாக தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளும், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு இப்போது இருக்கும் நடைமுறையே தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது மருத்துவ வல்லுநர்கள் குழுவில் இருந்து பரிந்துரை ஒன்று முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதில் ஊரடங்கை வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாம். அது குறித்து இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
ஆனால் ஊரடங்கை நீட்டிக்கப்பட்டால் மக்கள் தரப்பில் இருந்து கடும் அதிருப்தி எழும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பொருளாதாரமின்றி மக்ளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.