ஸ்டாலினுடன் பேசிய சீக்ரெட்…! வாய் திறந்த ஓபிஎஸ் மகன்..!
மதுரை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம் என்ன என்பதை ஓபிஎஸ் மகனும், அதிமுக எம்பியுமான ரவிந்திரநாத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் இன்னமும் முடிந்தபாடில்லை. சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு சாதகமாக இருக்க அவரது முகாமில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.
ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் ஈபிஎஸ்சை அழைக்க, தர்மயுத்தம் நடத்தியவர் என்று விமர்சித்து அவரது அழைப்பை ஈபிஎஸ் நிராகரித்தார். ஓபிஎஸ் மகன் பற்றியும் கடுமையாக விமர்சித்து தள்ளினார். தினசரி வெளியாகும் முட்டல், மோதல் அறிக்கைகள், பேட்டிகள் அதிமுகவின் உண்மை தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் வேதனையை தந்து வருகிறது.
இந் நிலையில் ஸ்டாலினுடன் தான் பேசியது என்ன? ஈபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பது ஓ பன்னீர்செல்வம் என்ணம். அதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பும். ஆனால் எதிர்முகாமில் உள்ளவர்கள் நாங்கள் திமுகவை ஆதரிப்பதாக புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து யாரையும் நான் குற்றம் சொல்லமாட்டேன். ஆனால் இப்போது அதுபற்றி வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதிமுகவில் குடும்பமாக தான் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சி, உழைப்பை பாராட்டுகிறேன்.
ஓபிஎஸ் அதிமுகவின் நம்பிக்கை பாத்திரம் என்பது ஈபிஎஸ்சுக்கு தெரியும். பதவிக்காக அவர் ஏதேதோ சொல்லிக் கொண்டு இருக்கிறார். தொண்டர்களை அவர் குழப்புவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
அதிமுகவுக்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவன் நான். சேலத்தில் பாசறை ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தியவன்.
திசா கமிட்டி உறுப்பினர் என்பதால் தான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தேன். மக்கள் பிரச்னைகளை பேசவே இந்த சந்திப்பு. இதில் அரசியல் இல்லை என்று கூறினார்.