ஆளுநர் திடீர் ராஜினாமா…! அரசியல் களம் பரபர…!
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார் தமிழிசை சௌந்தர ராஜன். அரசியல் களத்தில் பரபரப்புக்கு காரணமாகி இருக்கும் அவரது இந்த முடிவு, எம்பி வேட்பாளராக களம் இறங்கலாம் என்ற எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன். தமிழக பாஜக தலைவராக இருந்த போது அவரின் அரசியல் பேட்டிகள், அரசியல் நடவடிக்கைகள் பிரபலம். 2019ம் ஆண்டு தூத்துக்குடி தொகுதியில் பாஜக எம்பி வேட்பாளராக போட்டியிட்டார். திமுகவின் கனிமொழியிடம் தோற்று போனார்.
இந் நிலையில், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அவரின் இந்த முடிவை வேறு பல பேச்சுக்களை உருவாக்கி இருக்கிறது.
எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார், அதற்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பதே பேச்சாக உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி தொகுதியில் இம்முறையும் அவர் வேட்பாளராக களம் இறங்க வசதியாகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி இருக்கின்றனர்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக அக்கட்சி அதிகம் நம்புகிறது. எனவே இம்முறையும் தமிழிசைக்கு வாய்ப்பு தரலாம் என்று மேலிடம் முடிவு செய்திருந்ததாகவும், அதனாலேயே தமிழிசை ராஜினாமா செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.