அதென்ன மோதானி…? 17 கட்சிகளின் தெறியாட்டம்.. பரபர வீடியோ
டெல்லி: டெல்லியில் மோதானி என்ற வார்த்தை இப்போது அரசியல் களத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் என்றோ பேசியது… ராகுல் காந்தியின் எம்பி பதவிக்கு வேட்டு வைத்துள்ளது. இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி என்று தமது ‘பயோ’வில் திருத்தும் நிலைமைக்கு சென்றிருக்கிறது. தம் மீதான தாக்குதல் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால் என்று ராகுல் காந்தியும், அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட களத்தை அதகளம் பண்ணி வருகின்றன.
நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி இருக்க, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் 17 கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி சென்றிருக்கின்றன. கருப்பு சட்டை அணிந்து பதாகைகளுடன் ஊர்வலம் சென்றுள்ளன. ஆளும் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள், ஊர்வலங்கள் நடப்பது வழக்கமானது தான் என்றாலும் இன்றைய போராட்டம் சற்றே வித்தியாசமானது என்று கூறுகின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.
முக்கியமாக, போராட்டத்துக்கு திரிணாமூல் காங்கிரசின் ஆதரவு. அடுத்ததாக எதிர்க்கட்சிகள் கையாண்ட ஒரேயொரு வார்த்தை… அதுதான் மோதானி…!
மோடி+அதானி = மோதானி என்று வேற லெவலில் எதிர்க்கட்சிகள் யோசித்த பதாகைகளிலும், ஊர்வலம் சென்ற பாதைகளிலும் எதிர்க்கட்சியினர் கலக்கி உள்ளனர். சோனியா காந்தி, டிஆர் பாலு மட்டுமல்லாது திரிணாமூல் காங்கிரஸ்ஸ எம்பிக்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஜனநாயகத்தின் குரலை மத்திய அரசு நசுக்குகிறது என்ற முழக்கங்கள் வழக்கமானது தான் என்றாலும் மோதானி என்ற வார்த்தை சற்றே புதிதாய் இருக்க, அந்த பெயரை பலரும் இணையத்தில் அதிகம் தேடி பார்த்துள்ளனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். பேசாமல் கடந்து போயிருக்க வேண்டிய விஷயத்தை இப்போது தகுதி நீக்கம் என்ற பெயரில் ராகுலை லைம்லைட்டுக்கு பாஜக கொண்டு வந்துவிட்டது என்றும் அவர்கள் கூறி உள்ளனர். மொத்தத்தில் மோதானி விவகாரம் இப்போதைக்கு ஓயாது என்பது தான் நிதர்சனம்.