காரில் போகும் போது கண்ட காட்சி…! வேட்டியை கிழித்து திமுக எம்எல்ஏ செய்த ‘காரியம்’
விழுப்புரம்: விழுப்புரத்தில் விபத்தில் கால் உடைந்து கதறிய இளைஞருக்கு வேட்டியை கிழித்து திமுக எம்எல்ஏ ஒருவர் முதலுதவி செய்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன். எம்எல்ஏ ஆகும் முன்பு எலும்பு முறிவு மருத்துவராக பணியாற்றி வந்தவர். விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் மக்களிடம் மனுக்கள் வாங்க காரில் சென்று கொண்டு இருந்தார்.
வழியில் ராகவன்பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த ஜெயக்குமார் என்ற இளைஞர் விபத்தில் சிக்கினார். அவரின் இடதுகால் எலும்பு முறிந்து போக… சாலையில் கதறி துடித்துள்ளார். அதை கண்ட விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் உடனடியாக களத்தில் இருந்தார்.
எலும்பு முறிந்த இளைஞருக்கு உடனடியாக கட்டு போட வேண்டிய நிலைமை. கட்டுப்போட எந்த துணிகள் இல்லாததை கண்டார். உடனடியாக தமது காரில் இருந்த திமுக கரைவேட்டியை எடுத்து வந்தார். அதை கிழித்து பாதிக்கப்பட்ட இளைஞருக்கு கட்டு போட்டு முதலுதவி செய்தார்.
அதன் பிறகு ஆம்புலன்சுக்கு அவர் தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் இளைஞருடன் மருத்துவமனைக்கு பறந்தது. தகுந்த நேரத்தில் உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி அளித்து, செயலாற்றிய திமுக எம்எல்ஏ லட்சுமணனை பொதுமக்கள் பாராட்டி தள்ளி வருகின்றனர்.