முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்... முதலமைச்சராக பதவியேற்பு…!
சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்று தனிபெரும்பான்மை பெற்றது. சட்டமன்ற திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 நாட்களுக்கு முன்பாக ஆளுநரை சந்தித்த அவர் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலாலும் முதலமைச்சராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய அரசின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பதவியேற்பு விழாவுக்கு வந்த ஆளுநரை ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு பதவியேற்க உள்ள அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் ஆளுநர், ஸ்டாலின் ஆகியோர் விழா மேடைக்கு வந்தனர். தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
பின்னர் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து, மற்ற 33 அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் தான் பதவியேற்பு விழா நடந்தது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதை தொலைக்காட்சி வாயிலாக கண்டு களிக்க அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
பதவியேற்பு விழாவுக்கு பின்னர் இன்று மாலை 4 மணியில் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் கொரோனா பரவல், கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.