கொரோனா தடுப்பூசியால் மரணம்…? ஐசிஎம்ஆர் பதில்
டெல்லி; இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா? இல்லையா? என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
உலகையே உண்டு இல்லை என்று பண்ணிய கொரோனாவை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்தியாவை பாடாய் படுத்திய கொரோனா தொற்றை எதிர்க்க மக்களுக்கு தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து, வெற்றிகரமாக சாதித்து காட்டியது.
தற்போது கொரோனா தொற்று இருக்கிறதா? என்கிற அளவுக்கு மத்திய மாநில அரசுகளின் சுகாதார நடவடிக்கைகள் திறம்பட இருக்கின்றன. இந் நிலையில், கோவிட் தாக்குதலுக்கு பின்னர், இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து உள்ளதாக பரவலாக கருதப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் குஜராத் நவராத்திரி விழாவின் போது கர்பா நடனம் ஆடிய 10 இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தனர். இதன் பின்னரே கொரோனா தடுப்பூசி குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
மக்களிடம் போதிய புரிதல் இல்லாததே இதுபோன்ற கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் குழப்பங்கள் காரணம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வந்தனர்.
இந் நிலையில் இதற்கு மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறி உள்ளதாவது; 2021 அக்டோபர் முதல் 2023 மார்ச் 31ம் தேதி வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்ற 18 வயது முதல் 45 வயது உள்ள ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் கொரோனா தடுப்பூசி இளைஞர்களின் திடீர் மரணம் என்ற அபாயத்தை குறைத்துள்ளது தெரிய வந்திருக்கிறது. எனவே பயம் வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.