எடப்பாடியை பற்றி கவிதை எழுதிய அமைச்சர்..! இணையத்தில் வைரல்
சென்னை: எடப்பாடியாரை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு.. தொண்டு செய்ய ஆணையிட்டுவிட்டு என்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரங்கல் கவிதை எழுதியுள்ளார்.
கடந்த 13ம் தேதி, தமது ட்விட்டர் பக்கத்தில் ‘தானைத் தலைவரை பெற்றெடுத்த தாய் தவுசாயம்மாள் மறைந்தார்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டை தொடர்ந்து, தற்போது மேலும் சில வரிகளைச் சேர்த்து, வசன நடையிலான கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
இதுதான் அந்த கவிதை
தங்க மாங்கனியைப் பெற்றெடுத்த
தங்கமகள் தவுசாயம்மாள் மறைந்தார்
என்ற செய்தி அண்ணன் எடப்பாடியார்
அவர்களுக்கு மட்டும் பேரிழப்பு அல்ல!
எனக்கும்தான்,எங்களுக்கும்தான்!
சிலுவம்பாளையம் கண்ணீரில்
நனைகிறது. மக்கள் நெஞ்சங்களில்
ஏக்கப் பெருமூச்சு எண்ணங்களை
சிதறடிக்கிறது.
தாயே தவுசாயம்மாள் அவர்களே!
அண்ணன் எடப்பாடியாரை எங்களிடம்
ஒப்படைத்துவிட்டு தமிழ்நாட்டிற்கு
தொண்டு செய்ய ஆணையிட்டுவிட்டு
ஆண்டவனின் திருவடி நிழலில்
இளைப்பாற சென்றாயோ தாயே!
உங்கள் ஆத்மா அமைதியாகட்டும்!
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்!
என்று கவிதை எழுதி இருக்கிறார். வழக்கமாக, அதிரடியாக பேசும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது கவிதையிலும் கலக்கி உள்ளார்.