பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் திருப்பம்….! அமைச்சர் சொன்ன முக்கிய விஷயம்
மதுரை: எழுவர் விடுதலையில் சட்ட சிக்கல் இருப்பதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நாட்டை மட்டுமல்ல…. உலகையே உலுக்கிய ராஜிவ்காந்தி படுகொலை சம்பவம் அரங்கேறி 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் பேர் இன்னமும் சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுதலையை தமிழீழ ஆதரவாளர்கள், அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
7 பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் என்றோ உத்தரவிட்டு விட்டது. அதனை தொடர்ந்து சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் அனுப்பப்பட்டு விட்டது.
இது நடந்து 2 ஆண்டுகள் கடந்தும் உறுதியான முடிவு வெளியாகவில்லை. ஜனாதிபதிக்கு தான் அதிகாரம் என்று ஆளுநர் கூறிவிட, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டார்.
இந் நிலையில் எழுவர் விடுதலையில் சட்ட சிக்கல் இருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியின் விவரம்:
7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நடவடிக்கை எடுங்கள் என்று ஜனாதிபதியை கட்டாயப்படுத்த முடியாது. ஆளுநர் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர்கள் விடுதலையில் நிறைய சட்டசிக்கல் இருக்கிறது. ஆனால் முதல்வர் எந்த சட்ட சிக்கலிலும் சிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.