புதிய கல்விக் கொள்கை ஓகேவா... இல்லையா..? அமைச்சர்களுடன் எடப்பாடி டிஸ்கஷன்
சென்னை: புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
அண்மையில் நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை குறித்த ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதனை தொடர்ந்து ஆதரவு, எதிர்ப்பு என மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்துகளை கூறி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் குஷ்புவும் ஆதரித்தார். ஆனால் அவரது இந்த நிலைப்பாடு அவரது கட்சிக்குள்ளே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி, குஷ்புவின் முதிர்ச்சியற்ற செயல் என்று விமர்சித்து உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர். இந் நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.
ஆலோசனையின் போது அமைச்சர்கள் கேபி அன்பழகன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையின் முடிவில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.