3 முக்கிய தொகுதிகளை திமுகவிடம் பெற்ற கொமதேக…! மனிதநேய மக்கள் கட்சிக்கும் தொகுதிகள் அறிவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் 3 தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு பணிகளை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. அதிமுக 171 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அக்கூட்டணியில் உள்ள பாமக, பாஜக கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
திமுகவிலும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு என தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. இந் நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் 3 தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய 3 தொகுதிகள் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.