இன்னும் 4 ஆடியோ இருக்கு…! ஓபிஎஸ் தரப்பு போட்ட குண்டு…! திகிலில் ஈபிஎஸ் டீம்
சென்னை: பொன்னையன் பேசியது ஆடியோ பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில் மேலும் இதுபோன்று 4 வீடியோக்கள் உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு போட்டுள்ள குண்டால் ஈபிஎஸ் தரப்பு அதிர்ந்து போயிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி ஆகியோரை பற்றியும், அதிமுகவில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பது பற்றியும் அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஒரு ஆடியோ தமிழக அரசியலை உலுக்கி இருக்கிறது.
எடப்பாடிக்கு 9 எம்எல்ஏக்கள் தான் ஆதரவு, சிவி சண்முகம் எனது மகனை விட 4 வயது சின்னவர், சாதி கட்சியாக மாறிய அதிமுக என கன்னியாகுமரி கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக செல்பேசி உரையாடலை ஓபிஎஸ் தரப்பு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். அதிமுகவில் மட்டுமல்ல மற்ற கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள இந்த ஆடியோ விவகாரம் அதிமுக அடிமட்ட தொண்டர்களை உசுப்பி இருக்கிறது.
அதிமுகவில் என்ன நடக்கிறது? என்று கவலையுடன் அவர்கள் இருக்க… இது போல மேலும் 4 செல்போன் உரையாடல்கள் இருப்பதாகவும், நேரம் வரும் போது அவற்றை வெளியிட உள்ளதாகவும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார். அவர் போட்ட இந்த குண்டு, இப்போது ஈபிஎஸ் வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி டீமில் இருந்து கொண்டு ஓபிஎஸ்சுடன் இன்னமும் தொடர்பில் உள்ளவர்களின் ஆடியோக்களும் வெளியாகக்கூடும் என்று தகவல்கள் பறந்த வண்ணம் உள்ளன. அடுத்தடுத்து நடக்கும் அனைத்தும் இனி ஈபிஎஸ்சுக்கு மேலும் சிக்கலையும், நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்பதால் அதிமுக உண்மை தொண்டர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.