சசிகலா புதிய கட்சி துவக்குகிறாரா…? ஓகே சொன்ன முன்னாள் அமைச்சர்
சென்னை: சசிகலா தனிக்கட்சி தொடங்கட்டும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.
சசிகலாவால் அமமுக பரபரப்பாகிறதோ இல்லையோ… அதிமுக எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது. நிர்வாகிகளுடன் சசிகலா பேசிய ஆடியோ இன்னும் எத்தனை உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. இதுவரை வெளியான ஆடியோக்களே அதிமுகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து உள்ளது.
சசிகலாவின் இந்த புதிய ஆடியோ ரூட், அதிமுக தலைமைக்கு பெரும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. சசிகலாவுடன் தொடர்பில் இருந்தவர்கள், தொலைபேசியில் பேசியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிமுக கட்டம் கட்டிவிட்டது.
மாவட்டம் தோறும் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விளாத்திகுளம் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஒரு தகவல் மீண்டும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
இந் நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: சசிகலா தனியாக கட்சி தொடங்கலாம், அதிமுக என்ற பெயரை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லக்கூடாது.
அதிமுகவில் உள்ளவர்கள் யாரிடமும் சசிகலா பேசவில்லை. அவரை அதிமுகவில் இணைத்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனாலும் அவர் எதற்காக இப்படி பேசி வருகிறார் என்பது புரியவில்லை.
அவர் சசிகலா புதிய கட்சி தொடங்கட்டும்…. அது அவர்களின் உரிமை. நாங்கள் தடுக்க முடியாது என்று கூறி உள்ளார்.