என் வூட்ல தண்ணி பூந்துருச்சு… எம்எல்ஏக்கள் எங்கே..? அரசை பொளந்த பிரபல நடிகர்
சென்னை: எம் வூட்ல தண்ணி பூந்துருச்சு… என்று பிரபல நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டு தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
யாரும் எதிர்பார்க்கவில்லை…. இப்படி மழை கொட்டுமா? தண்ணீர் தேங்குமா? வெளிநாடுகளில் மழை வெள்ள பாதிப்புகளை ஊடகங்களில் பார்த்து உச் கொட்டும் நமக்கு இப்போது நம்மூரிலும் அதே நிலைமை என்றால் சும்மாயிருப்போமா?
தமிழகத்தில் வரலாறு காணாத மழை மிக்ஜாம் என்ற புயலால்… எங்கு பார்த்தாலும் வெள்ளம், குறிப்பாக சென்னை ஆறுகள், ஏரிகள் நடுவில் வீடுகள் கட்டி குடியிருப்பது போன்ற வீடியோக்கள் பார்ப்போரை பதறவும், உதறவும் வைத்து இருக்கிறது.
வேதனை, இயலாமை… இந்த இரண்டும் சேர்ந்த கலவையாக கோபம் என்ற கொந்தளிக்கும் மக்கள் ஒரு பக்கம் இருக்க… பிரபலங்களின் வீடுகளும் மழை வெள்ளத்துக்கு தப்பவில்லை.
அப்படி மழை வெள்ளம் என் வூட்ல பூந்துவிட்டது என்று கதறி இருக்கிறார் பிரபல நடிகர் விஷால். சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் அவரது வீட்டில் இப்போது ஒரு அடி அளவுக்கு தண்ணீர்… உபயம் மிக்ஜாம் புயல் தந்த மழை.
மழைக்கு ஏழை, பணக்காரன்,இருப்பவன், இல்லாதவன் என தெரியாது… அது பெய்யும் போக்கில் தேங்கும் நீர் பள்ளங்களை தேடி ஓடும்… இதுதான் யதார்த்தம்.
ஆனால் நடிகர் விஷாலே என்னவோ தமது வீட்டில் மட்டுமே மழை தண்ணீர் தேங்கி விட்டது போன்ற வேதனைப்பட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு சென்னையில் எம்எல்ஏக்களையும், திமுக அரசையும் வெளுத்து கட்டி இருக்கிறார்.
என்ன செய்வது என்று தெரியாமல்… வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார். 2015ம் ஆண்டில் பெய்த மழையை விட இது அதிகம்.. சென்னை மாநகராட்சி என்ன செய்கிறது? நாம் எதற்காக வரி கட்றோம்? என்று சகட்டு மேனிக்கு விளாசித் தள்ளி இருக்கிறார்.
அந்த வீடியோ இந்த செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது. வீடியோவை பார்ப்போர் அரசை திட்டிவிட்டு, மழைக்கு என்ன பேதம்? அதற்கு விஷால் வீட்டு அட்ரஸ் தெரியாது என்று கலாய்த்து தள்ளி இருக்கின்றனர்.