Sunday, May 04 12:03 pm

Breaking News

Trending News :

no image

பதவியேற்ற சில மணி நேரங்களில் வெடித்த சர்ச்சை..? எல். முருகனுக்கு வந்த பிரச்னை…!


டெல்லி: மத்திய அமைச்சராகி இருக்கும் தமிழக பாஜக தலைவர் எல் முருகனின் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கிய விஷயம் இணையத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றப்பட்டு இருக்கிறது. புதியதாக 43 அமைச்சர்கள் பொறுப்பேற்று இருக்கின்றனர். இந்த மாற்றம் மிக முக்கியமானதாகவும், பெரிய மாற்றம் என்ற பேச்சுகளும் ஓடி கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் இருந்து பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டு உள்ள இந்த பதவியை கண்டு, தமிழக பாஜக தலைவர்களும், அவரது ஆதரவாளர்களும் சூப்பர் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

எல் முருகனுக்கு வாழ்த்துகள் தமிழகம் முழுவதும் இருந்து குவிந்து வருகிறது. எங்கும் மகிழ்ச்சி, எந்த பக்கமும் மகிழ்ச்சி என்ற தருணம் நிலவி வரும் இந்த சூழலில் ஒரு புதிய சர்ச்சை ஒன்று எழுந்து பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

புதிய அமைச்சர்கள் பெயர், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பயோடேட்டா விவரங்கள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன. அதில் தான் இப்போது ஏகத்துக்கும் சிக்கல் எழுந்து இருக்கிறது.

அந்த பயோடேட்டாவில் அவர் வயது, கல்வித்தகுதி, இதுவரை இருந்த பொறுப்புகள் உள்ளிட்ட விவரங்கள் விளக்கமாக இடம்பெற்றுள்ளன. இங்கு தான் வினையே வந்திருக்கிறது. முருகனின் பயோடேட்டாவில் அவர் தமிழகத்தில் கொங்கு நாட்டை சேர்ந்தவர், 44 வயது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது அவரது மாவட்டம் கொங்குநாடு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொங்கு நாடு என்று ஒரு மாவட்டம் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் இந்த பயோடேட்டாவில் அப்படி குறிக்கப்பட்டு உள்ளது. இது தெரிந்தே நடந்த ஒன்றா? இதை எப்படி சரிபார்க்காமல் விட்டார்கள் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இன்று பதவியேற்ற மற்ற அமைச்சர்களுக்கு அனைத்து விவரங்களும் சரியாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் எல் முருகனின் பயோ டேட்டாவில் மட்டும் இப்படி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை கொங்கு நாடு என்று ஏன் பிரிக்க வேண்டும்..? திமுக அரசு ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கான பதிலடியா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Most Popular