Sunday, May 04 12:48 pm

Breaking News

Trending News :

no image

அமித் ஷா… அலற வைத்த ஸ்டாலின்…! CHASING STORY


சென்னை: டெல்லியையும், மத்திய பாஜக மற்றும் அமைச்சர் அமித் ஷாவையும் அதிர வைத்து இருக்கிறது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது.

மத்திய பாஜக அரசின் கைப்பாவை தான் இந்த அமலாக்கத்துறை என்பது எதிர்க்கட்சிகளின் பல ஆண்டு கால குற்றச்சாட்டு. அரசியல் எதிரிகளை துவம்சம் செய்ய மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவி விடுகிறது என்பது பல மாநிலங்களில் இருந்து இன்னமும் எழுந்து வரும் புகார்.

அரசியல் எதிரிகள் மட்டுமல்லாது, பிரபல தொழிலதிபர்கள், தனிநபர், செல்வாக்கு மிக்கவர்கள் என பலரும் அமலாக்கத்துறையினரின் நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கின்றனர். மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், தமிழகத்தில் எப்படியாவது கால்பதிக்க நினைக்கும் பாஜக அமலாக்கத்துறையை பயன்படுத்தி அமைச்சர்கள் மீது பாய்கிறது என்பது ஆளும் அரசின் வாதம்.

அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பவம்… இப்படி வரிசை கட்டி ஆக்ஷன் எடுக்கும் அமலாக்கத்துறையை ஓட விட்ட ஆபரேஷன் திண்டுக்கல்லில் அரங்கேறி தேசிய அளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதன் பின்னணியை குறித்து விளக்கும் செய்தி இதோ: மத்திய அரசின் சட்ட திட்டங்களை அமலாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் அமலாக்கத்துறை. சட்ட விரோத பண பரிமாற்றம் என்பதை தடுப்பது தான் முக்கிய அம்சம்.

எப்பவும் போல… அதிலும் சில கறுப்பு ஆடுகள் புகாரில் சிக்கியவர்களை ஸ்கெட்ச் போட்டு வலைவீசி பணம் பெற்று வருவதாக தகவல்கள் கசிந்தன. அப்படித்தான் மதுரை மண்டல அலுவலகத்தில் வந்து சொத்துக்குவிப்பு வழக்கு விவரங்களை ஆராய்ந்தனர். அவர்களில் சிலரை catch செய்து பேரம் பேசி உள்ளனர் சில அதிகாரிகள்.

அந்த வலையில் சிக்கியவர்களில் ஒருவர் மருத்துவர் சுரேஷ் பாபு. இதற்கு டீலிங் பேசியவர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி. ரூ.1 கோடி என பேசி முதல்கட்டமாக சில லட்சங்கள் கைமாற… ருசி கண்ட பூனையாக மேலும் 50 லட்சத்தை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணம் வேண்டும் என்ற தொந்தரவுகள் அதிகரிக்க, விழி பிதுங்கிய சுரேஷ் பாபு, நேரிடையாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் போயிருக்கிறார். அவ்வளவு தான்… அக்கு வேறு ஆணிவேறாக நடந்த அனைத்தையும் பதிவு செய்து… cross check செய்து மாநில தலைமையிடம் note அனுப்பி இருக்கின்றனர்.

ஏற்கனவே அமலாக்கத்துறையின் நடவடிக்கை பற்றிய கொதிப்புகள் அரசு தரப்பிடம் இருக்க…. பல கட்ட துறைகளின் கலந்தாலோசனைக்கு பிறகு முதலமைச்சரின் நேரடி கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது. எல்லாவற்றையும் அதிகாரிகளிடம் கலந்து பேசி, உண்மை என்றால் ஓகே என்று அவர் ஒப்புதல் கொடுத்துவிட, அப்புறம் தான் அரங்கேறிய திண்டுக்கல் சேசிங் மற்றும் கைது நடவடிக்கை.

பின்னர் அமலாக்கத்துறை மதுரை மண்டல அலுவலகத்தில் சோதனை என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி காட்டி இருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தற்போது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அமலாக்கத்துறை மூலம் மாநில அரசுகளை அதிர வைத்த மத்திய அரசுக் செக் வைக்கவே முதலமைச்சரின் smart நடவடிக்கை  என்பது அவர்களின் வாதம். தொடர்ந்து அமலாக்கத்துறை வைக்கும் குறி, அவற்றின் செயல்பாடுகள் பற்றிய சந்தேகங்கள் ஆகியவற்றை வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது திண்டுக்கல் chasing.

இனி… இந்த விவகாரத்தை தேசிய அளவில் கவனம் பெறும் வகையில் கொண்டு செல்ல வேண்டும், மற்ற மாநிலங்களிலும் இத்தகைய நடவடிக்கைகளை அந்தந்த அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லும் தமிழக அரசின் நடவடிக்கையே இது என்பது தான் அரசியல் விமர்சகர்களின் எண்ணமாக உள்ளது.

Most Popular