இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை பார்க்கலாம்:
டிஎன்பிஎஸ்சி மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தம்மை விடுவிக்குமாறு செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை சென்ட்ரல், அரக்கோணம் இடையே 10 மின்சார ரயில்கள் ஆவடி பணிமனை பராமரிப்பு காரணமாக இன்று இரவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் 1253 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையம்(TNPSC) தெரிவித்துள்ளது.
பழனியில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் டின்களில் வைக்கப்பட்டு இருந்த கெட்டுப்போன பஞ்சாமிர்தத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி, குழி தோண்டி புதைத்து அழித்தனர். பக்தர்களின் இருந்து பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பொற்கால ஆட்சியை நடத்தி வருவதாக அமைச்சர் சக்கரபாணி கூறி உள்ளார். ஒட்டன்சத்திரத்தில் 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முகூர்த்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்து காணப்படுவதாக வாடிக்கையாளர்கள் கூறி உள்ளனர்.
637வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கனட நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜூலியை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இருநாடுகளின் உறவு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் விலகி உள்ளதற்கு குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசர நிலையே காரணம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.