என்ன ரெடியா…? பள்ளிகளை திறக்கும் தமிழக அரசு…!
சென்னை: பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வர வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை வெகு வேகமாக பரவி வந்தது. ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக தொற்று குறைவாக பதிவாகி வருகிறது. கொரோனா எதிரொலியாக 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மதிப்பெண்களை கணக்கிட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஜூன் மாதம் 3வது வாரத்தில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்பு தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
தனியார் பள்ளிகளில் ஜூன் முதல் வாரத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன. அநேகமாக இந்த மாத இறுதிக்குள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் ஜூலையில் பள்ளிகளை திறக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை ஆகிய பணிகளுக்கு தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.