ரூ.6000 வேணுமா? அப்ப இதை பண்ணியே ஆகணும்
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதி தொடர்பாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி எடுத்தது. குளத்தில் வீடா என்று சந்தேகம் எழுந்த அளவுக்கு நிலைமை மோசமானது. வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால் உடைமைகள், கல்வி சான்றிதழ்கள், சொத்து ஆவணங்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன.
வாழ்வாதாரத்தை ஒட்டு மொத்தமாக சேதமாக்கி வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு 6000 ரூபாய் நிதியை அறிவித்தது. ரேஷன் கடைகளின் மூலம் இந்த நிதி அளிக்கப்படுகிறது. ரொக்கமாக தரப்படும் இந்த நிதி வரும் 20ம் தேதி முதல் பயனாளிகளுக்கு தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பயனாளிகள் மத்தியில் ஒரு குழப்பம் எழுந்துள்ளது. அதாவது, சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த, சொந்த ஊரில் ரேஷன் கார்டு வைத்திருந்தால் பணம் கிடைக்குமா என்பது தான் அது.
இந்த சந்தேகத்துக்கு தெளிவான விடை தற்போது கிடைத்துள்ளது. சென்னையில் வசித்து வரும் வெளி மாவட்ட மக்கள், தங்களது சொந்த ஊரில் குடும்ப அட்டையை வைத்திருந்தாலும் வெள்ள நிவாரண நிதிக்கு விண்ணப்பம் அளிக்கலாம். அதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடைகளிலும் கிடைக்கும் என்று அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.
மொத்தத்தில் நிவாரண நிதியை உரிய வழியில், முறையில் பயனாளிகள் கைகளில் சென்று சேர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.