மத்திய அரசை காணவில்லை…. ! ‘படம்’ காட்டிய அவுட்லுக்….!
டெல்லி: மத்திய அரசை காணவில்லை என்று தில்லாக ஒரு போட்டோவை தமது பத்திரிகையில் வெளியிட்டு அசத்தி இருக்கிறது அவுட்லுக்.
நாட்டில் கொரோனா 2வது அலையின் உச்சம் எங்கோ போய்விட்டது. நாள்தோறும் கொரோனாவால் பலியானவர்களின் சடலங்களை எரியூட்ட நாட்கணத்தில் சுடுகாட்டில் வெளியே காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகி விட்டது.
எரிக்க இடம் இல்லாததால் கங்கை நதியில் பிணங்களை வீசி செல்லும் கொடூரமும் அரங்கேறி இருக்கிறது. நாடே கொரோனாவால் கதறிக் கொண்டிருக்க மக்களை காப்பாற்றுவதற்காக இருக்கும் மத்திய அரசு என்று ஒன்று இருக்கிறது என்கிற கேள்வி இப்போது மக்கள் மனதில் வலுவாக எழுந்துள்ளது.
மருத்துவமனைகளில் இடம் இல்லை, சுடுகாட்டிலும் இடம் இல்லை, தடுப்பூசிகள் இல்லை என்று மக்களின் ஒலங்களுக்கும் எல்லையில்லாத நிலை இப்போது நிலவி வருகிறது. பல மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரம், மதரீதியான கூட்டங்கள், கும்பமேளா ஆகியவையே தொற்றுகள் பரவி மக்களின் உயிர்களை குடிக்க காரணம் என்று விமர்சனங்கள் நாள்தோறும் எழுந்து வருகின்றன.
இந் நிலையில் பிரபல பத்திரிகையான அவுட்லுக் பத்திரிகை யாரும் செய்ய துணியாத தில்லான காரியத்தை செய்து அசத்தி இருக்கிறது. தமது இதழின் முகப்பில் மத்திய அரசை காணவில்லை அதற்கு வயது 7 என்று குறிப்பிட்டு முழு நீள போட்டோவை ‘மிஸ்ஸிங்’ என்ற தலைப்பில் வெளியிட்டு மக்களின் எண்ணங்களை பறைசாற்றி இருக்கிறது.
பிரதமர் மோடி பதவியேற்று 7 ஆண்டாகிவிட்டது என்பதை குறிக்கும் வகையில், 7 வயதான மத்திய அரசை காணவில்லை, கண்டுபிடித்தால் நாட்டு மக்களிடம் கூறுங்கள் என்று அவுட்லுக் தெரிவித்துள்ளது. இந்த அட்டகாசமான, அதே நேரத்தில் இப்போதுள்ள நிலைமையை அழுத்தம், திருத்தமாக சொல்லியுள்ள இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.