என்னங்க நடக்குது…? இறையன்பு ஐஏஎஸ் திமுகவில் இணைந்துவிட்டாரா…?
சென்னை: தமிழகத்தின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் திமுகவில் சேர்ந்ததை போன்ற தோற்றம் கொண்ட போஸ்டர் ஒன்றை திமுக நிர்வாகி வெளியிட, அது இணையத்தில் தாறுமாறாக பரவிக் கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்ரானார் ஸ்டாலின்… ஆட்சி மாற்றம் போல அப்படியே அதிகாரிகள் மாற்றம் அசுர கதியில் நடந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். சிறந்த நிர்வாக திறன் கொண்டனர்.
அவரின் பணி நியமனத்தை அதிகாரிகள் மட்டுமல்ல… அனைத்து கட்சிகளின் தலைவர்களும் வரவேற்றனர். தலைமை செயலாளர் ஆன பின்னர் வெளியிட்ட 2 அறிக்கைகளை பற்றி பேசாத நபர்களே கிடையாது. தான் எழுதிய புத்தகங்களை அரசு சார்பில் வாங்கக்கூடாது, ஆடம்பர உணவு ஏற்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்ற அந்த அறிக்கைகள் சூப்பர் ரகம் என்று தமிழகமே பாராட்டி தள்ளியது.
நிலைமைகள் இப்படி இருக்க… இறையன்பு போட்டோவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோவையும் சேர்த்து திமுகவினர் ஒட்டி உள்ள போஸ்டர் தான் இப்போது பெரும் பேச்சாக உள்ளது. அச்சு அசலாக மாற்று கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர் யாராவது திமுகவில் சேர்ந்தால் எப்படி அடிப்பார்களோ அப்படி அடித்து தள்ளி ஒட்டி இருக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தான் இப்படிப்பட்ட கூத்து போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. பல்லடம் திமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரில் வாசகங்களும் அமர்க்களம்.
அதில் உள்ள வரிகள் இவைதான்: சொன்னத்தை செய்வோம்; செய்வதை சொன்னோம் என்று செய்து கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்.க்கும் நன்றி, நன்றி, நன்றி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டரை பார்த்து திமுகவினரே பலர் முகம் சுளிக்கின்றனராம்… நேர்மையான அதிகாரி என்பவரை எதற்கு போஸ்டரில் குறிப்பிட வேண்டும், அதிகாரியின் நற்பெயருக்கு ஊறு விளைவிப்பது போகாலாதா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
கட்சியினர் மனோநிலை இப்படி இருக்க… சதா சர்வ காலமும் இணையத்தில் நோண்டி அனைவர் பற்றியும் கதா காலட்சேபம் செய்யும் நபர்கள் இறையன்பு திமுகவில் சேர்ந்துவிட்டாரா? அவர் எப்படி? போஸ்டரை பார்த்தால் திமுகவில் சேர்ந்துவிட்டது போன்று தானே அர்த்தம் வருகிறது? என்று திமுகவை கலாய்த்து தள்ளி இருக்கின்றனர்.
இன்னும் ஒரு தரப்போ… இந்த போஸ்டர் அடிப்படையிலேயே தவறு இப்படி ஒட்டி இருக்கக்கூடாது என்று கம்பு சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஏதோ ஓரு ஆர்வத்தில் இப்படி போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தாலும் அதுவும் கூட தவறு தானே என்று விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் மக்கள்…!