டாட்டா.. பை.. பை…! அரசியல் ஆலோசகர் பதவியை உதறிய பி.கே…!
டெல்லி: அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் உத்திகளை வகுப்பதில் மன்னனாக வர்ணிக்கப்படுபவர் பிரசாந்த் கிஷோர். பிகே என்ற அடைமொழியுடன் வலம் வரும் அவர், இந்த முறை திமுக கூட்டணிக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பணியாற்றினார்.
அவரது ஆலோசனையின் பேரில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் மீண்டும் வெற்றி கொடியை நாட்டி இருக்கிறது. தமிழகத்தில் 150 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ள திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந் நிலையில் எதிர்பாராத திருப்பமாக அரசியல் ஆலோசகர் என்ற பொறுப்பில் இருந்து தாம் விலகுவதாக பிரசாந்த் கிஷோர் பரபர அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்த போது இதை கூறிய அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளதாகவும், ஐபேக் நிறுவனத்தை அதன் நிர்வாகிகள் தொடர்ந்து நடத்துவார் என்றும் கூறி உள்ளார்.
அவரது அறிவிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அநேகமாக அவர் திரிணாமூல் காங்கிரசில் இணைய இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் கூறுகின்றன.