தமிழக அரசியலில் நிகழ்ந்த பெரும் சோகம்…! அதிமுக, திமுக தொண்டர்கள் வேதனை
சென்னை: அதிமுகவுக்கு இரட்டை இலை என்ற சின்னம் கிடைக்க காரணமாக இருந்த மாயத்தேவர் காலமானார். அவருக்கு வயது 88.
1935ம் ஆண்டு உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் மாயத்தேவர். இவரது தந்தை பெயர் பெரிய கருப்பத்தேவர், தாயார் பெருமாயி. பள்ளிக்கல்வி பாளையங்கோட்டையிலும் பட்டப்படிப்பு பச்சையப்பன் கல்லூரியிலும் முடித்தவர். சட்டக்கல்வியை சென்னை சட்டக்கல்லூரியில் படித்து பின்னர் ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து அதிமுகவை தொடங்கிய சமயம். அப்போது திண்டுக்கல் தொகுதி எம்பி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக சார்பில் யாரை போட்டியிட வைப்பது என்று தருணம் பார்த்துக் கொண்டிருந்த எம்ஜிஆர் மாயத்தேவரை அறிவித்தார்.
தேர்தல் நேரத்தில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவரிடம் 16 சின்னங்களை காட்டி செலக்ட் செய்யுமாறு தேர்தல் அதிகாரிகள் கூறினார். அப்போது அவர் தேர்வு செய்த சின்னம் தான் இரட்டை இலை. இந்த சின்னத்தை மக்களிடம் மிக எளிதாக கொண்டு சேர்க்கலாம் என்று எம்ஜிஆரிடம் கூறினார் மாயத்தேவர்.
அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார். அதிமுகவுக்கு தேர்தலில் முதல் வெற்றியை பெற்று தந்த சின்னம் இரட்டை இலை. அந்த இரட்டை இலை சின்னம் தான் இன்று வரைக்கும் அதிமுகவின் சின்னமாக தொடர்கிறது. வெற்றி சின்னத்தை அதிமுகவுக்கு கண்டறிந்து வழங்கியவர் மாயத்தேவர்.
அதன் பிறகு 1977ம் ஆண்டு தேர்தலில் திண்டுக்கல் எம்பியாக மீண்டும் வெற்றி பெற்றார். மத்திய ஆட்சியில் அதிமுக இடம்பெற்றிருந்த காரணத்தால் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அது கிடைக்காமல் போனதால் கோபத்தில் அதிமுகவில் இருந்து விலகினார். பிறகு திமுகவில் இணைந்து 1980ல் திண்டுக்கல் எம்பியானார். அதிமுகவில் சீனியராக, பொருளாளராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் மாயத்தேவரின் உதவியாளராக இருந்தவர்.
தொடர்ந்து பல்வேறு பதவிகளில் இருந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக சின்னாளப்பட்டியில் உள்ள தமது வீட்டிலேயே தங்கி இருந்தார். இந் நிலையில் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.
மறைந்த மாயத்தேவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், செந்தில்குமரன் ஆகிய மகன்களும், சுமதி என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் வெங்கடேசன் 2 ஆண்டுகள் முன்பு மறைந்தார்.
மாயத்தேவர் உடல் இறுதியாத்திரை முடிந்து நாளை சின்னாளப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.