Sunday, May 04 11:59 am

Breaking News

Trending News :

no image

கமல் தொகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு…? காரணம் ராகுல் காந்தி…!


கோவை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு பதிவு கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் விஐபி தொகுதிகள் என்று அடையாளம் காட்டப்பட்ட சில தொகுதிகள் உண்டு. கொளத்தூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், எடப்பாடி, போடிநாயக்கனூர், கோவில்பட்டி என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

இந்த பட்டியலில் கோவை தெற்கு தொகுதியும் உள்ளது. காரணம் இந்த தொகுதியில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் தான். காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிட்டனர்.

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கையே பெரும் ஆச்சரியத்தை அளித்தது. முதலில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்க, சிலபல சுற்றுகள் கழித்து முன்னிலையில் இருந்தார்.

பிறகு பாஜகவின் வானதி சீனிவாசன், கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமே கடும் போட்டி நிலவியது. கடைசி நிமிடம் வரை இதய துடிப்பை எகிற வைத்த இந்த ஓட்டு எண்ணிக்கை முடிவில் வானதி சீனிவாசன் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் கமலை தோற்கடித்தார். அதற்கான வெற்றி சான்றிதழையும் தேர்தல் ஆணையம் வழங்கிவிட்டது. கடைசி வரை போராடி கமல் தோற்று போக, கட்சியும் கலகலத்தது.

அடுத்த சில நாட்களிலேயே கட்சியின் துணை தலைவர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளும் கமலுக்கு டாட்டா காட்டிவிட்டு கட்சியை விட்டு விலகினர். ஒரு தொகுதியின் முடிவு கமல் கட்சிக்குள் பூகம்பத்தையே ஏற்படுத்தியது.

இந்த பிரச்சனைகள் ஒரு பக்கம்.. தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்ற, இந்துஸ்தான் ஜனதா கட்சி சார்பில் சுயேட்சையாக களம் இறங்கிய ராகுல் காந்தி என்பவர் மனு ஒன்றை அளித்தார்.

வானிதி சீனிவாசன் வெற்றியில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவர், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதே கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்துள்ளார். வாக்கு பதிவு எந்திரத்தில் மோசடி செய்து வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். எனவே மறு வாக்கு எண்ணிக்கை அவசியம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.அநேகமாக இந்த வழக்கு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை நாட்கள் ஆனாலும் கோவை தெற்கு தொகுதி விவகாரம் பேசப்படும் விவகாரமே இருந்து வருகிறது.

 

 

Most Popular