கொரோனா ருத்ர தாண்டவம்…! நிவாரண நிதி கோரும் முதலமைச்சர்….!
சென்னை: கொரோனா சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: கொரோனா 2வது அலையால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பாதுக்கப்பட்டு தற்போது 1,52,389 பேர் சிகிச்சையிலும், அதில் 31,410 பேர் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சையிலும் உள்ளனர். இந்த அலை நமது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பின் மீது கடும் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆலைகளை அமைக்கவும், ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்கவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்களும், தொழில் நிறுவனங்களும் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டுகிறேன்.
மக்கள் அளிக்கும் நன்கொடை முழுவதும் கொரோனா மருத்துவ கட்டமைப்பிற்கு மட்டுமே செலவிடப்படும். மேலும், செலவீனங்கள் குறித்த வெளிப்படையான தகவல்கள் மக்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.