இந்த மதுரை காளை டெய்லி ஓட்டலுக்கு வருது…! 20 பரோட்டா சாப்பிடுது…!
மதுரை: மதுரையில் கோயில் காளை ஒன்று டெய்லி 20 பரோட்டா சாப்பிடுவது பெரும் அதிசயமாகி இருக்கிறது.
என்னதான் நாம் வீட்டில் விதம் விதமாக சமைத்து சாப்பிட்டாலும் பரோட்டாவுக்கு இணையாகாது. அதிலும் கல்லில் இருந்து அப்படிக்கா… எடுத்து… இரண்டு பக்கமும் தட், தட் என்று தட்டி பாத்திரத்தில் தூக்கி வீசும் ஓட்டல்களை கண்டால் நாமும் உள்ளே சென்று சில பல பரோட்டாக்களை வயிற்றில் தள்ளுவோம்.
ஆனால்… மதுரையில் கோவில் காளை ஒன்று தினமும் பரோட்டாக்களை சாப்பிட்டு தள்ளுகிறது என்றால் நம்ப முடிகிறதா..? நம்புங்கள்.. மதுரையில் பெருங்குடி அருகே ஓட்டல் நடத்தி வருகிறார் முருகேசன். ஒருநாள் தமது கடையில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவில்காளை ஒன்று அங்கு வந்து நின்றுள்ளது.
சரி…. காளை பசியாக இருக்கிறது போலும் என்று நினைத்த முருகேசன்… தமது ஓட்டலில் இருந்த சிலப்பல பரோட்டாக்களையும், சப்பாத்தியையும் கொடுத்துள்ளார். அந்த காளையும் சமத்தாக சாப்பிட்டுவிட்டு போய்விட்டது.
ஆனால் மறுநாள் நடந்தது தான் ஆச்சரியம்… அதே இடம், அதே நேரம் டாண் என்று பரோட்டா சாப்பிட ஆஜராகி இருக்கிறது காளை. வழக்கம் போல காளை சும்மாதான் நிற்கிறது என்று நினைத்து முருகேசன் அமைதியாக இருந்து உள்ளார்.
மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை…மீண்டும் கொஞ்சம் பரோட்டா தர சாப்பிட்டுவிட்டு சத்தமில்லாமல் காளை போய்விட்டது. இது அப்படியே நாள்தோறும் தொடர… சளைக்காமல் கோவில் காளைக்காக 20 பரோட்டாக்களை தனியாக எடுத்து வைக்க ஆரம்பித்து இருக்கிறார் முருகேசன்.
ஒரு கட்டத்தில் காளைக்காகவே தனியாக மாவு பிசைந்து பரோட்டாவை தயார் செய்து தினமும் சாப்பிட கொடுத்து வருகிறார். காளையும் சரியாக அதே நேரத்துக்கு வருகிறது… பரோட்டாக்களை உள்ளே தள்ளுகிறது… சாப்பிட்டதும் சமத்துபிள்ளையாக சென்று விடுகிறது.
பரோட்டாவை சாப்பிடாமல் காளை ஓட்டலைவிட்டு நகர்ந்தது இல்லை. இதை எப்படியோ பார்த்துவிட்ட அப்பகுதி மக்கள் அதை வீடியோ, போட்டோவாக எடுத்து இணையத்தில் ஷேர் செய்துள்ளனர். இப்போது கோவில் காளை சாப்பிடும் 20 பரோட்டா செய்தி தான் மதுரையில் பேமஸ்…!