#VIRAL VIDEO முட்டிக்கிட்ட ஈபிஎஸ், ஓபிஎஸ்…! சட்டசபையில் வேட்டியை மடித்துக் கட்டிய எம்எல்ஏ
சென்னை: சட்டசபையில் யார் அதிமுக என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய போது வேட்டியை மடித்துக் கட்டி அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் மல்லுக்கு நின்ற வீடியோ வெளியாகி உள்ளது.
சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இன்று தாக்கல் செய்தார். அதன் மீது அனைத்து கட்சிகளின் எம்எல்ஏகள் பேசினர். கட்சிக்கு ஒருவர் என மசோதாவை ஆதரித்து பேசினர்.
அப்போது அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் சட்டத்தை முழுமையாக அதிமுக ஆதரிக்கிறது என்று பேசினார். அவரை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமது கருத்தை முன் வைத்தார். அவர் பேசி முடித்து இருக்கையில் உட்கார்ந்ததும் எழுந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவருக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, முக்கிய மசோதா, மூத்த உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார். அப்போது அதிமுக எம்எல்ஏ கோவிந்தாமிக்கும், மனோஜ் பாண்டியனுக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.
இருவரும் கடுமையாக பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்துக் கொண்டு எதிர்ப்பை காட்டி மல்லுக்கு நின்றார். சிறிது நேரத்தில் சபாநாயகர் விளக்கத்தை ஏற்க மறுப்பதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.