தடுப்பூசி போட்டும்.. மாவட்ட ஆட்சியரை தொற்றிய கொரோனா…!
கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மின்னல் போல இருக்கிறது. நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி வருகிறது. நாள்தோறும் உயிரிழப்பும் அதிகமாகி கொண்டே வருகிறது.
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றுக்கு பலியாகி வருகின்றனர். இந் நிலையில் கடலூர் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
தாம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளதை அறிவித்துள்ள அவர், கொரோனா அறிகுறிகள் இருப்பதால் பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பரிசோதனைகளின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாகவும், தாம் இப்போது தனிமைப்படுத்தி கொண்டு உள்ளதாகவும் கூறி உள்ளார், வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ள சந்திரசேகர் சாகமூரி, கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.