வேட்பாளர் பட்டியல் வெளியீடு…! திருந்தவே ‘திருந்தாத’ பாஜக…!
சென்னை: எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டு தமிழ் மீதான வன்மத்தை மீண்டும் பதிவு செய்திருக்கிறது மத்திய பாஜக.
தமிழக தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளன.
ஆனால் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் திக்கி திணறியபடி வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்களும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் தமிழகத்தில் அப்பிடி, இப்படி என்று 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. தளி தொகுதிக்கு நாகேஷ்குமாரும், உதகை தொகுதிக்கு போஜராஜனும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
விளவ்ங்கோடு தொகுதிக்கு ஆர் ஜெயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, மற்ற 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. தமிழகத்தில் தாம் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு உள்ளது.
முதல் பட்டியலும் அப்படிதான் இருந்தது, இப்போது வெளியிடப்பட்ட பட்டியலும் அப்படித்தான் உள்ளது. முழுக்க முழுக்க இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதில் ஆங்கிலம், இந்தி, தமிழ் என மும்மொழிகளில் வேட்பாளர்களின் பெயர், தொகுதி விவரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆக மொத்தத்தில் தமிழகத்தில் தமிழை புறக்கணித்து பாஜக அரசியல் செய்கிறது நன்றாக புலப்படுவதாக தமிழறிஞர்கள் கருத்து கூறி வருகின்றனர். தமிழ் புறக்கணிப்பு குறித்து தமிழக பாஜகவில் உள்ள முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு இணையதளங்களில் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.