தனிமையில் நடிகர் விஜய்…! எங்கே இருக்கிறார்…?
சென்னை: கொரோனாவுக்காக திரையுலகமே திரண்டு வந்த நிதி அளித்துக கொண்டு இருக்க எங்கே இருக்கிறார் நடிகர் விஜய் என்ற கேள்விகள் இணையத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளது.
தமிழகமே கொரோனாவில் சிக்குண்டு தவித்து கொண்டிருக்கிறது. உயிர்களை காப்பாற்ற, மருத்துவ உபகரணங்கள் வாங்க அனைவரும் நிதி அளிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பின்படி முதல் ஆளாக நடிகர் சிவகுமார், மகன் சூர்யாவும் வந்த 1 கோடி தந்து திரையுலகின் நிதி உதவி பயணத்தை தொடங்கி வைத்தனர்.
அதன் பிறகு அனைத்து தரப்பிலும் இருந்து நிதி உதவிகள் தமிழக அரசிடம் குவிய ஆரம்பித்தன. யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் அஜித் 25 லட்சம் கொடுத்து பாராட்டை பெற்றார். அதன் பிறகு ரஜினியின் மகள் சவுந்தர்யா, கணவர் விசாகன், மாமனார் வணங்காமுடியுடன் 1 கோடி ரூபாய் தந்து ஆச்சரியம் காட்டினார்.
பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து 50 லட்சம் ரூபாய் தந்துவிட்டு போனார். போகும் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும், மாஸ்க் முக்கியம் என்று கூறிவிட்டு பறந்தார்.
தமிழக திரையுலகத்தில் விஷயங்கள் இப்படி நடந்து கொண்டிருக்க நடிகர் விஜய் எங்கே என்ற கேள்விகள் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் நடிகர் ஓய்வில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமது 65வது படப்பிடிப்புக்காக வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் ஜார்ஜியா நாட்டுக்கு பறந்த அவர் கடந்த மாத கடைசியில் ஊர் திரும்பினார். நடிகை பூஜா ஹெக்டேவுடன் பாடல் காட்சி கலக்கலாக வந்திருப்பதாக சொல்லப்பட அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தி யூனிட்டை மட்டுமல்ல… நடிகர் விஜய்யையும் கலக்கு கலக்கிவிட்டதாம்.
இதையடுத்து தனிமையில் இருந்து வரும் நடிகர் விஜய் குடும்ப மருத்துவர் அட்வைஸ்படி மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அனைத்தும் ஓரளவு சகஜ நிலைமைக்கு வந்த பின்னர், முதலமைச்சரை சந்திப்பார் என்றும் கட்டாயம் நிதி அளிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.