கொரோனாவில் இருந்து அமைச்சர் குணம்…! ஆனால் மறுநாள் மரணம்…!
ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் அமைச்சர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்ட மறுநாளே உயிரிழந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட்டில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஹஜி ஹூசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் கடந்த 23ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் அவர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று குணமடைந்தது தெரிய வந்தது.
இந் நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அன்சாரி இன்று உயிரிழந்தார். இதயம் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
73 வயதாகும் அன்சாரி, 4 முறை மதுப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். அவரது திடீர் மரணத்துக்கு அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இரங்கலை தெரிவித்துள்ளார்.