ஸ்டாலின் கவனிப்பாரா…? கருணாநிதி எம்எல்ஏ ஆன தொகுதியின் இப்போதைய நிலை…?
கரூர்: கருணாநிதியை முதல் முறையாக எம்எல்ஏ ஆக்கிய குளித்தலை தொகுதியில் வைக்கப்பட்டிருந்த தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை குப்பையில் கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை முதல் முறையாக எம்எல்ஏவாக்கி சட்டசபைக்கு அனுப்பி வைத்த தொகுதி இதுதான். அதனால் எப்போதும் திமுகவுக்கும், கட்சியினருக்கும் இது தொகுதியின் மீது மதிப்பும், அபிமானமும் உண்டு.
ஆனால் குளித்தலை நகராட்சியில் நடந்த விஷயம் ஒன்று இப்போது அனைவரையும் அதிர வைத்துள்ளது. நகராட்சி அலுவலக வளாகத்தில் இந்த தமிழ் வாழ்க என்று பெயர் பலகை அகற்றப்பட்டு, பல ஆண்டுகளாக அங்கேயே குப்பைகளுடன், குப்பையாக கிடக்கிறது.
இதைத்தான் குளித்தலை சமூக ஆர்வலர்கள் அமைப்பு, கரூர் மாவட்ட சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:
குளித்தலை நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை இருந்தது. இந்த பலகை அகற்றப்பட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கிடக்கிறது. இந்த பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி செம்மொழியான தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் அருகில் டைமஸ் சிட்டி என்ற புதிய குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் தற்போது உருவாகிவிட்டன. ஆனால் இங்கு தெரு விளக்குகள் எதுவும் இன்று வரை பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதியில் மக்கள் இரவு நேரங்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, நகராட்சி ஆணையர் இந்த இரண்டு கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். திமுக ஆட்சியில், கருணாநிதியை முதல்முறையாக எம்எல்ஏவாக்கி அழகு பார்த்த தொகுதியில் உள்ள இந்த கோரிக்கையை ஆட்சி மேலிடம் கவனிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.