கதம்… கதம்…! தமிழகத்தில் முழு ஊரடங்கு…? இன்று வெளியாகும் அறிவிப்பு…!
சென்னை: தமிழக்ததில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை எல்லை மீறிவிட்டது. தொடக்கத்தில் சிறியதாக காணப்பட்ட தொற்று இப்போது கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
நேற்றைய தினம் மட்டும், 26,465 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாகும். கிட்டத்தட்ட 197 பேர் ஒரே நாளில் பலியாக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதால் கர்நாடகா, கேரளா போன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின் முழு ஊரடங்கு பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு எத்தனை நாட்களுக்கு விதிப்பது? என்ன என்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. தொடக்கத்தில் தொற்றுகள் கட்டுக்கடங்காமல் உள்ள தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முழு ஊரடங்கு பற்றிய அறிவிப்பு அனேகமாக இன்று வெளியாகும் என்றும், திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. முதல்கட்டமாக 2 வாரம் அல்லது இந்த மாதம் முழுமைக்கும் முழு ஊரடங்கை அமல்படுத்தி அதன் பலனை பொறுத்து அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.