கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக…! அதிர்ச்சியில் அதிமுக முகாம்…!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்துக்கு தேர்தல் என்று அறிவித்த நாளில் இருந்து அரசியல் கட்சிகள் பரபரக்க ஆரம்பித்து உள்ளன. அதில் அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடான கூட்டணி முடிவான நிலையில் தேமுதிகவுடான கூட்டணி மட்டும் முடிவுக்கு வராமல் இழுத்தடித்து கொண்டே இருந்தது.
3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த பின்னும் தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக மறுத்துவிட்டது. பாமகவுக்கு இணையாக 23 தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என்று தேமுதிக கேட்டதாகவும், அதை அதிமுக ஏற்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
ஒரு கட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி அதன் பின்னர் கூட்டணியை தொடர்வதா? இல்லையா என்பது முடிவெடுக்கப்படும் என்று தேமுதிக அறிவித்தது. அதன்படி, இன்று சென்னையில் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக ஆலோசனை நடத்தியது.
பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அதிமுக கூட்டணி வேண்டாம் என்றும், தனித்து போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து ஒருமித்த கருத்தாக அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக அதிரடியாக விலகி இருப்பது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.