மாஸ்க் போடாத பெண்ணை.. தரதரவென்று இழுத்து.. தூக்கி போட்டு மிதித்த போலீஸ்…!
போபால்: மாஸ்க் போடவில்லை என்பதற்காக பெண் ஒருவரை தரதரவென்று இழுத்து, அடித்து, உதைத்து தூக்கி போட்டு மிதித்து இருக்கிறது காவல்துறை.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக, மாஸ்க் கட்டாயம், தனிமனித இடைவெளி அவசியம் என்று வீதிகள் தோறும் அரசுகள் முழங்கி வருகின்றன. அப்படி பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கிறேன் பேர்வழி என்று மாநில காவல்துறை எடுத்த நடவடிக்கை பார்ப்போரை அதிர வைத்துள்ளது. கொரோனா காரணமாக அந்த மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.
சாகர் மாவட்டம் ஒன்றில் போலீசார் கண்காணிப்பில் இருந்தனர். அப்போது பெண் ஒருவர் தமது மகளுடன் கடைக்கு சில பொருட்களை வாங்க சென்றிருக்கிறார். அவர் மாஸ்க் அணியாமல் சென்றதாக தெரிகிறது. அதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து, தரதரவென்று இழுத்து போட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். காவல்துறை ஜீப்பில் ஏற சொல்ல அவர் மறுக்க… கொஞ்சம் இரக்கமின்றி அந்த பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி இருக்கின்றனர்.
அம்மாவை அடித்து உதைப்பதை பார்த்த மகள், போலீசாரிடம் கெஞ்சி அழுதுள்ளார். என்ன நடக்கிறது என்று சுற்றி இருப்பவர்கள் வழக்கம் போல வேடிக்கை சிலரோ, செல்போனில் மும்முரமாக வீடியோ எடுத்தனர். யாரும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தோ, அல்லது தாக்குதலை தடுத்து நிறுத்தவோ முன் வரவில்லை. மனிதநேயமற்ற தாக்குதலை கண்டித்த தற்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.