அட..! சபாநாயகர் இவருதானா..? சட்டசபையில் கலகலப்பு தான்…!
சென்னை: தமிழக சட்டசபையின் சபாநாயகராக திமுகவின் மூத்த உறுப்பினர் துரைமுருகன் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. கருத்துக்கணிப்புகளில் கூறியபடி தனி பெரும்பான்மையுடன் திமுக அரியணையில் அமருகிறது. வரும் 7ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் ஸ்டாலின்.
தமது அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் ஒரு பக்கம் ஸ்டாலின் தீவிரமாக இருந்தாலும் சபாநாயகராக யாரை முன்னிறுத்தலாம் என்று ஒரு பேச்சு கட்சியில் கனச்கச்சிதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் முக்கிய பெயராக திமுகவின் மூத்த உறுப்பினராக உள்ள துரைமுருகன் பெயர் அறிவாலயத்தில் டிக் அடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அவரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது குறித்து எவ்வித உறுதி தன்மையும் திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட வில்லை.
துரைமுருகன் காட்பாடி தொகுதியில் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றார். பொதுவாக எப்போதும் கலகலப்பு நபராக இருக்கும் அவர் ஒருவேளை சபாநாயகர் பொறுப்பு வகித்தால் அவை முழுவதும் நகைச்சுவையாக இருக்கும் என்று இப்போதே உடன்பிறப்புகள் சிலாகிக்கின்றனர்.
துணை சபாநாயகராக ஒட்டன்சத்திரம் தொகுதியில் வென்ற திமுகவின் சக்கரபாணி தேர்வு செய்யப்படுவார் என்று மற்றொரு தகவல் உலா வர ஆரம்பித்து உள்ளது. இணையத்திலும் இந்த தகவல் வழக்கம் போல ஏகபோகத்துக்கு வைரலாகி இருக்கிறது.
முன்னதாக மூத்த உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசனை சபாநாயகர் இருக்கையில் உட்கார வைத்து அழகு பார்த்து விடலாம் என்று ஸ்டாலின் நினைத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக சொற்ப வாக்குகளில் தோற்று போய்விட்டார். ஒருவேளை சுப்புலட்சமி ஜெகதீசன் வெற்றி பெற்றிருந்தால் தமிழக சட்டசபையை அலங்கரிக்கும் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.