பாஜக அண்ணாமலை தமிழனே இல்லை…! மா.செ. பகீர் தகவல்…! பாய்ந்த தொண்டர்கள்
நாமக்கல்: ராசிபுரத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவர் பாஜக அண்ணாமலையை தமிழனே கிடையாது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை தீவிர சுற்றுப்பயணத்தில் உள்ளார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அவர் செல்ல வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார்.
கோவையில் இருந்து புறப்பட்ட அண்ணாமலைக்கு பாஜகவின்ர் வழி எங்கும் உற்சாக வரவேற்பு அளித்து திக்முக்காட வைத்துள்ளனர். அப்படி ஒரு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் அண்ணாமலைக்கு சிறப்பு ஏற்பாடு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அண்ணாமலைக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு தந்து அசத்தினர்.
அப்போது நடந்த சம்பவம் ஒன்று பாஜகவினரே எதிர்பார்க்காதது ஆகும். வரவேற்பு முடிந்து திரும்பி செல்லும் போது உள்ளே புகுந்தார் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா.
படக்கென்று யாரும் எதிர்பார்க்காத வகையில்… நீங்கள் தமிழனே கிடையாது, இங்கு எதற்காக வந்தீர்கள் என்று கேட்டு திடீர் என அண்ணாமலையிடம் வாக்குவாதத்தில் இறங்கினார்.
அவ்வளவு தான்… அங்கு குழுமியிருந்த பாஜக தொண்டர்கள் சீறினர். மாவட்ட செயலாளர் ராஜாவை கப்பென்று பற்றி அங்கிருந்து உடனடியாக அகற்றினர். தங்கள் தலைவரான அண்ணாமலையை அவர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர். கூட்டத்தில் நீங்க தமிழனே கிடையாது என்று குபீரென ஒருவர் கிளப்பி அட்டகாசம் பண்ணியதால் சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது.