Sunday, May 04 11:43 am

Breaking News

Trending News :

no image

அறிவாலயம் வரும் அடுத்த ‘மாஜி’ அமைச்சர்…? படு ஸ்பீடில் செந்தில் பாலாஜி


சென்னை: முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் திமுகவில் இணைய இருப்பதாக ஒரு தகவல் பரபரவென்று உலாவி வருகிறது.

சட்டமன்ற தேர்தல் தோல்வி அதிமுகவை மெதுவாக அசைக்க பார்த்து வருவதாக சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. சசிகலா ஆடியோ அரசியல் ஒரு பக்கம், அவருடன் செல்போனில் பேசும் நிர்வாகிகள் அதிரடி நீக்கம் என்று இபிஎஸ், ஓபிஎஸ் பரபரப்பாக உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான கருத்து வேற்றுமைகள் வேறொரு பக்கம் கட்சி நிர்வாகிகளை கவலைப்பட வைத்துள்ளன.

அதேநேரத்தில் அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் என பலர் திமுகவை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கின்றனர். அதன் முக்கிய திருப்பமாக அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு போன முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார். இது தவிர பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலரும் திமுகவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.

இப்போது அந்த வரிசையில் முன்னாள் அமைச்சர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்ற அடையாளத்துடன் உள்ள தோப்பு வெங்கடாசலம் பெயரும் அடிபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுகவை நோக்கி தமது பார்வையை அவர் திருப்பி இருப்பதாகவும், அக்கட்சியில் இணையும் முடிவில் தலைமையை தோப்பு வெங்கடாசலம் அணுகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழியாக அவர் அறிவாலயம் நோக்கி நகர முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டுள்ளதாகவும் அறிவாலய பக்கம் தகவல்கள் கசிகின்றன.

கரூர் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய அதிமுக பிரமுகர்களை வளைக்கும் முயற்சியின் அடுத்த கட்டம் இது என்று திமுகவினர் கிசுகிசுக்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 10 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் பெற்றவர் தோப்பு வெங்கடாசலம்.

அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகளை அள்ள தோப்பு வெங்கடாசலத்தின் இணைப்பு பயன்படும் என்றும், இவர் போன்று மேலும் பலரை திமுகவுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Most Popular