அட இவரா..? அடுத்த விக்கெட்…! திமுகவுக்கு தாவும் அதிமுக முன்னாள் எம்பி…?
சென்னை: அதிமுக முன்னாள் எம்பி பரசுராமன் திமுகவில் விரைவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது.
10 ஆண்டுகள் கழித்து இப்போது தான் திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. எக்காரணம் கொண்டும் ஒரு சிறு கெட்ட பெயர் கட்சிக்கோ, ஆட்சிக்கோ வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
கிட்டத்தட்ட 75 நாள் ஆட்சியின் மீது பெருமளவு விமர்சனங்கள் இன்னமும் எழவில்லை. திமுகவை பற்றி கடும் விமர்சனம் வைக்கும் பலரும் இப்போது அக்கட்சியை பாராட்டி தள்ளுகின்றனர்.
திமுகவின் ஆட்சியை பார்த்து அதிமுக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்தும் ஏராளமானோர் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். இந் நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்பி பரசுராமன் திமுகவில் இணைய உள்ளதாக ஒரு தகவல் உலா வர ஆரம்பித்து உள்ளது.
இது குறித்து பரசுராமன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது: பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதல்படி, அவர் கொள்கைகளை பின்பற்றி சிறப்பாக ஆட்சி செய்யும் முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்துகிறேன். ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் என்று பேசி உள்ளார்.
பரசுராமன் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக உள்ளார். அவரின் பேச்சு தான் இப்போது அதிமுக தலைமையை அதிர வைத்துள்ளது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவர்.
அண்மைக்காலமாக அவரிடம் இருந்தும் விலகியே உள்ளதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ தேர்தலில் சீட் கிடைக்காத போதே அவர் வருத்தமாக காணப்பட்டராம். அப்போது முதல் கட்சிக்கும், தமக்கும் உள்ள நெருக்கத்தை குறைத்து கொள்ள ஆரம்பித்தாராம் பரசு ராமன். இப்போதைய பாராட்டு பேச்சு அவர் அறிவாலயம் கிளம்ப தயாராகி விட்டார் என்ற பேச்சு கிளம்பி உள்ளது, அதிமுக தலைமையை அதிர வைத்துள்ளது.