மாஸ்க் இருந்தால் தான் ஐஏஎஸ், ஐபிஎஸ்…! கண்டிஷன் போட்ட யுபிஎஸ்சி
டெல்லி: சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதுபவர்கள், சானிடைசருடன் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 3 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வில் முதல் கட்டமாக முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 4ம் தேதி நடத்தப்பட உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வர்களுக்கு கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதுபற்றி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. அறிக்கை வெளியிட்டு உள்ளது.
தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மாஸ்க் இல்லாதவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். கையோடு தனியாக சானிடைசர் கொண்டுவர வேண்டும்.
தேர்வறையில் சமூக இடைவெளி கட்டாயம். தனிநபர் சுகாதார நடவடிக்கையயை கடைபிடிக்க வேண்டும். தேர்வு நாளன்று காலை 9.20 மணிக்குள் விண்ணப்பதாரார் அட்மிட் கார்டுடன் தேர்வறைக்குள் சென்றுவிட வேண்டும். பிற்பகல் 2.20 மணிக்கு பின்பு அவர் வெளியேறலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.