Sunday, May 04 12:57 pm

Breaking News

Trending News :

no image

கலெக்டர், டிஎஸ்பி ஆக வேண்டுமா…? இப்போது வந்தாச்சு சான்ஸ்…!


சென்னை: குரூப் 1 முதல்நிலை தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழியே பெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களைத் தவறாகப் பதிவு செய்து விடுகின்றனர்.

இதனால் ஒரு சில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க தேர்வாணையம், விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கென தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வரை மாற்றிக் கொள்ள வழிவகை செய்துள்ளது.

கடைசி நாளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பல விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை கனிவுடன் பரிசீலித்த தேர்வாணையம், அவ்வாறு விவரங்களைத் தவறாகப் பதிவு செய்து சமர்ப்பித்த விவரங்களை மாற்றிக் கொள்ள மற்றுமொரு வாய்ப்பளிக்கலாம் என முடிவு செய்துள்ளது.

அதன்படி, தேர்வாணையத்தால் இனி வரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்த பின்னர் 4 நாட்கள் கழித்து, விண்ணப்ப தகவல்களை சரிபார்த்து மாற்றிக் கொள்ள 3 நாட்கள் (Application Correction Window Period) வழங்கப்படும்.

இந்த 3 நாட்களில் விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் தகவல்களை தவறாக பதிவு செய்திருந்தால், அதனை மாற்றி சரியான தகவல்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே, விண்ணப்பத்தில் பதிவு செய்த விவரங்களை, விண்ணப்பம் திருத்தம் செய்யும் காலத்தில் மாற்றும்போது, அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் அதற்கு விண்ணப்பத்தாரரே பொறுப்பாவார்.

விண்ணப்பம் நேர் செய்யும் காலத்திற்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்ற முடியாது.

விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்றக்கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், கடிதங்கள், மின்னஞ்சல் போன்றவற்றின் மீது தேர்வாணையத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது.

எனவே, விண்ணப்பதாரர்கள், இந்த விண்ணப்ப நேர் செய்யும்/ திருத்தும் செய்யும் கால அவகாசத்தினை சரியான முறையில் பயன்படுத்தி சரியான தகவல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Most Popular