கொரோனாவின் கோரப்பசி…! பிரபல துணை நடிகர் பலி….!
செங்கல்பட்டு: தமிழ் சினிமாவின் பிரபல துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 48.
தமிழ் திரையுலகில் அண்மைக்காலமாக கொரோனாவின் தாக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் பலர் கொரோனா தொற்றால் உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல துணை நடிகர் மாறன் நேற்றிரவு பலியாகி உள்ளார். செங்கல்பட்டு அருகே உள்ள நத்தம் பகுதியில் வசித்து வந்த அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்கு மாறன் சிகிச்சை எடுத்து கொண்டிருந்த தருணத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2000ம் ஆண்டு வெளியான வேதம் படம் தான் மாறனுக்கு முதல் படம். அதன்பின்னர் விஜய்யின் கில்லி படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். டிஸ்யூம் படத்தில் குள்ள நடிகரிடம் வம்பிழுக்கும் சீன் ஏக பிரபலம். அதே போல தலைநகரம் படத்தில் வடிவேலுவுடன் டீக்கடை வாசலில் பேசும் வசனங்கள் பெரும் பாராட்டுக்களை பெற்றது. இவரின் ஏற்ற இறக்கமான காமெடியான வசனங்கள் அனைவரும் பார்த்து ரசிக்கும்படி இருந்தது.
தொடக்க காலத்தில் பல மேடைகளில் கானா பாடல்களை பாடி வந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.