Sunday, May 04 12:55 pm

Breaking News

Trending News :

no image

அண்ணாமலைக்கு ‘ஸ்பெஷல்’…! தயாராகும் திமுக பிளான்


சென்னை: அண்ணாமலை கோவை மட்டுமல்லாது வேறு எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

லோக்சபா தேர்தல் 2024க்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.

மற்ற மாநிலங்களை விட இம்முறை அதிக கவனத்தை தமிழகம் மீது பாஜக திருப்பி இருக்கிறது. எப்படியும் இரட்டை இலக்கத்தில் எம்பிக்களை ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டியபடி தேர்தல் வேலைகளிலும் இறங்கி இருக்கிறது.

தாமரையை கருக வைத்துவிட வேண்டும் என்று அதிமுக, திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட பல கட்சிகள் சூளுரையே எடுத்துள்ளன. அதிமுக கூட்டணியில் இப்பவும் இடமில்லாமல் பாஜக தவிப்போடு காத்திருக்க, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது தெரியவில்லை.

யார் எங்கு போட்டியிடுவார்கள் என்று உறுதியாகாத நிலையில் கோவையில் அண்ணாமலையை போட்டியிட வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தமக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை கூறிவிட்டதாக ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்க… அவர் நின்றால் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதில் அதிமுகவை விட திமுக குறியாக இருப்பதாக தெரிகிறது.

வேட்பாளர் தேர்வு குறித்து திமுக நேர்காணல் நடத்திமுடித்துவிட்ட நிலையில், ஒருவேளை கோவையில் அண்ணாமலை களம் இறங்கினால் யார் எதிர் வேட்பாளர் என்பதில் திமுக தரப்பில் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்ப வரை சிறைப்பறவையாக இருக்கும் செந்தில் பாலாஜியை எப்படியும் உள்ளே இருந்து வெளியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று திமுக தலைமை துடியாய் துடிக்கிறது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி என்று தெரியாத நிலையில், உள்ளே இருந்தபடியே அண்ணாமலைக்கு எதிராக செந்தில் பாலாஜி தேர்தல் பிளான் வடிவமைத்துவிட்டதாக ஒரு தகவல் உடன்பிறப்புகளுக்கு மத்தியில் கனஜோராக ஓடிக் கொண்டு இருக்கிறது.

கோவையில் ஒருவேளை அண்ணாமலை போட்டியிட்டால், கரூரில் திமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டால்.. என 2 விதமாக ஐடியாக்களை நோக்கி செந்தில் பாலாஜி பிளான் செய்து வருவதாக கூறப்படுகிறது. கரூரிலும், கோவையிலும் திமுக அல்லது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் வெற்றியை எப்படிப்பட்டாவது அறுவடை செய்துவிட வேண்டும் என்பதில் செந்தில் பாலாஜி தரப்பு உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

தேர்தல் கள தோல்வி என்பது அடுத்தக்கட்ட அரசியலை நிர்மாணிக்கும் என்பதை நன்கறிந்த செந்தில்பாலாஜி, அதற்கான வேலைகளை தொடங்கி விட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறி இருக்கின்றனர். உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும்… தாமரையை சூரியன் கருக வைத்துவிடும் என்று நம்புகின்றனர் உடன்பிறப்புகள்… நடக்குமா என்பதை மக்கள் மனமே முடிவு செய்யும் என்பதுதான் நிதர்சனம்…!

Most Popular