திமுக 178, காங். 20, மதிமுக 10, இடதுசாரிகள் 16, விசிக 6…! தொகுதிகளை இறுதி செய்த ஸ்டாலின்…!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் திமுக 178 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் 56 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அதிமுக, திமுகவுக்கு வாழ்வா, சாவா என்ற போராட்டம் என்று கூறலாம். தொடர்ந்து ஹாட்ரிக் அரியணைக்காக அதிமுகவும், எப்படியும் ஆட்சியை பிடித்தே தீருவது என ஸ்டாலினும் பிரம்ம பகீரத்தனம் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளனர். மாறி,மாறி இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பிரச்சாரம் ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இருகட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதிகள் ஒதுக்கீடு, பிரச்சார செலவுகள் என தேர்தல் பரபரப்பில் உள்ளன. அதிமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள், கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
திமுகவிலும் இதே நிலை நீடித்தாலும் இப்போது கூட்டணியில் உள்ள கட்சிகளின் அடிப்படையில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்று ஸ்டாலின் இறுதி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக இம்முறை 178 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த 178 தொகுதிகள் போக மற்றவையே கூட்டணி கட்சிகளுக்கு என்றும், எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்றும் பட்டியலை தயாரித்து இறுதி முடிவை எடுத்துவிட்டதாக அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டு உள்ளதாம். அதற்கு அடுத்த வைகோவின் மதிமுகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் 8, இ. கம்யூனிஸ்டு 8, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக தலைமை டிக் அடித்துள்ளதாம். முஸ்லிம் லீக் மற்றும் மமக ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் என மொத்தம் 56 தொகுதிகளை கூட்டணிக்கு திமுக ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீதம் உள்ள 178 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதிகள் ஒதுக்கீட்டில் இம்முறை காங்கிரஸ் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கைக்கு திமுக ஒத்து போகவில்லை என்று தெரிகிறது. கடந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்கி அதன் காரணமாக ஆட்சியை கோட்டை விட்டதால் இந்த தடவை 20 என்பதோடு திமுக முற்றுப்புள்ளி வைத்ததாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. இன்னமும் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாத நிலையில் இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.