42 நாள்தான்…! சிதைக்க காத்திருக்கும் கொரோனா…? உஷார்…!
டெல்லி: இந்தியா கொரோனாவின் 3வது அலையை 6 முதல் 8 வாரங்களில் எதிர் கொள்ளும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா அறிவித்து அதிர வைத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை இப்போது தான் 2வது வாரமாக சற்று குறைந்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு லட்சணக்கத்தில் பதிவாகி வந்த இந்த கொரோனா எண்ணிக்கை 60 ஆயிரம் என்ற அளவில் வந்துள்ளது.
கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந் நிலையில் இந்தியாவில் 6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3வது அலை வரக்கூடும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி அதிர வைத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: லாக்டவுனில் இருந்து பெரும்பாலான மாநிலங்கள் தங்களை விடுவித்துக் கொண்டு உள்ளன. கொரோனாவின் முதல் மற்றும் 2வது அலையில் இருந்து மக்கள் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
சமூக இடைவெளி இல்லாமலும், மாஸ்க் இன்றியும் உலவி வருகின்றனர். அதுவே 3வது அலையை இந்தியா எதிர்கொள்ளும் சூழலை உருவாக்கலாம். இப்போது முதலே அதன் பாதிப்புகளை நாம் அறிய ஆரம்பித்து இருக்கலாம். தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் 3வது அலையை தவிர்க்க முடியாது என்று கூறி உள்ளார்.