லிஸ்டிலேயே இல்லையே….? தமிழக பாஜக தலைவர் போட்டியில் அவர்…?
சென்னை: தமிழக பாஜக தலைவராக மதுரை வடக்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய டாக்டர் சரவணன் முயற்சித்து வருகிறார் என்ற தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
யாரும் எதிர்பார்க்கவில்லை… மத்திய அமைச்சராக அமர்ந்துவிட்டார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன். பாஜகவின் விதிகள் படி அமைச்சர் பதவியில் இருக்கும் நபர் கட்சி தலைவர் பதவியில் இருக்க முடியாது.
இதையடுத்து, இனி தமிழக பாஜக தலைவர் யார் என்பது பற்றிய விவாதங்களும், எதிர்பார்ப்புகளும் எகிறி இருக்கின்றன. புதிய தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயமும் தேசிய தலைமைக்கு ஏற்பட்டு உள்ளது.
எப்படியாவது தமிழக பாஜக தலைவராகி விட வேண்டும் என்று பலரும் முட்டி மோதி வருகின்றனர். தற்போது துணை தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவர்கள் தவிர வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் டெல்லி தொடர்புகள் மூலமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரனும் தனி ரூட்டில் டெல்லி கதவை தட்டியிருப்பதாக தெரிகிறது.
ஆனால் இது இப்படி இருக்க… இந்த பட்டியலில் இல்லாத ஒருவர் பெயர் இப்போது புதிய தலைவர் பதவிக்கான ரேசில் உள்ளதாக தகவல்கள் கசிந்து அசர வைக்கின்றன.
அதாவது அண்மையில் கட்சியில் இணைந்த டாக்டர் சரவணன் பெரு முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இவர் அண்மையில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதிக்கு பாஜக வேட்பாளராக களமிறங்கியவர்.
திமுகவில் இருந்து காலையில் கட்சி விலகி, மதிய நேரத்தில் பாஜக வேட்பாளர் பட்டியலில் தமது பெயரை இடம்பெற செய்தவர். அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர், சமூக செயற்பாட்டாளர்.
டெல்லியில் வலுவான தொடர்புகள் வைத்துள்ள டாக்டர் சரவணன், பாஜக தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது பற்றிய விவரம், தமிழக பாஜகவினருக்கு தெரிய வர படு ஆச்சரியத்தில் உள்ளனராம். எப்படி இது சாத்தியம் என்று பல கேள்விகளும் வர.. கடந்த முறை எல் முருகன் பெயரும் இப்படி தான் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதை நினைவு கூர்கின்றனர் தமிழக பாஜகவினர்…!