நடுராத்திரியில் திடீர் மரணம்…! வடிவேலுவுடன் நடித்தவர்
சென்னை: சினிமாக்களில் காமெடி நடிகராக வலம் வந்த போண்டா மணி, உடல்நலக்குறைவால் காலமானார்.
இலங்கையை பூர்விகமாக கொண்டவர் போண்டா மணி. பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் 1991ம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆனவர். சில ககாலம் இடைவெளிக்கு பின்னர், நடிகர் வடிவேலுவுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அவரை அடையாளம் காட்டின.
சுந்தரா டிராவல்ஸ், அவ்வை சண்முகி, வேலாயுதம், வின்னர் என பல நடிகர்களின் படங்களில் சிறுசிறு நகைச்சுவை வேடத்தில் நடித்தவர். வடிவேலு படங்களில் அவருடன் கூடவே நடிக்கும் காமெடி நடிகர்களில் இவரும் முக்கிய நடிகராக விளங்கினார்.
ஒரு படத்தில், குளத்தில் இருந்து எழுந்து வந்து, போலீஸ் வந்து என்ன கேப்பாங்க, எங்கேன்னு கேப்பாங்க, அடிச்சும் கேப்பாங்க, அதை மட்டும் சொல்லிராதீங்க என்று சொல்லிவிட்டு ஓடுவார். அடுத்த விநாடியே வடிவேலுவிடம் வரும் போலீசார், என்ன சொல்லிவிட்டு போனான் என்று கேட்க… அந்த இடமே நகைக்சுவையின் உச்சமாக மாறும்.
பல படங்களில் நடித்த போண்டா மணி 2 சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். பொழிச்சலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், நள்ளிரவு திடீரென வீட்டில் தடுக்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
போண்டா மணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்துவிட்டதாகவும், மருத்துவர்கள் கூறினர். போண்டா மணியின் மறைவை அறிந்த சக நடிகர்கள், திரையுலகினத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.