23 வருஷமாக தூங்கும் வினோத மனிதர்…! இந்தியாவின் நவீன கும்பகர்ணன்
ஜோத்பூர்: ஆண்டில் உள்ள 365 நாட்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு மனிதர் 300 நாட்களையும் தூங்கியே கழிக்கிறார்.
வாழ்க்கையில் தூக்கம் என்பது ரொம்ப அவசியம். ஒவ்வொரு மனுஷனுக்கும் நாள்தோறும் குறிப்பிட்ட நேரம் தூங்க வேண்டும். சிலர் தூக்கமே வருவது இல்லை என்று புலம்பி தள்ளுகின்றனர். ஆனால் ஒரு மனிதர் தமது வாழ்நாளில் 23 ஆண்டுகள் தூங்கி கொண்டே இருக்கிறார் என்றால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு மனிதர் இந்தியாவில் இருக்கிறார்.
ராஜஸ்தானில் ஜோத்பூர் பகுதியில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காராம். இவருக்கு வயது 42. பழக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு வினோத நோய் இருக்கிறது.. என்னவென்று கேட்கிறீர்களா..?
ஒரு வருஷத்தில் 300 நாள் இவர் தூங்குகிறாராம்… தொடக்கத்தில் ஒருநாள், 2 நாள் என்று தூங்க ஆரம்பித்தவர் பின்னர் வாரக்கணக்கில் தூங்க ஆரம்பித்தார். அதுவே மாதக்கணக்கில் என தொடர்ந்தது.
நாட்கள் நகர, நகர புர்காராமின் வித்தியாசமான நடவடிக்கையில் குழம்பி போயிருக்கிறார் மனைவி. ஒரு கட்டத்தில் முடிவெடுத்த மனைவி, புர்கா ராமை டாக்டரிடம் அழைத்து சென்றிருக்கிறார். என்ன பிரச்சனை என்று புர்காராமை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
அதன் முடிவுகள் தான் ஆச்சரியம் தருவதாக இருந்தது. இவருக்கு ஏற்பட்டு இருக்கும் நோயின் பெயர் ஆக்சிஸ் ஹைப்பர் சோமியா (axis hypersomnia). இது ஒரு வினோத நோய். இந்த நோய் தாக்கம் கண்டவர்கள், தூக்கத்தில் இருந்து எழ வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது… அவர்களின் உடல் ஓத்துழைக்காது.
இந்த நோயை குணப்படுத்தவே முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து உள்ளனர். நவீன கும்பகர்ணன் புர்காராம் இப்படி தூ…………..ங்கியே கிடப்பது ஏதோ அண்மையில் நிகழ்ந்தது அல்ல… கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இப்படித்தான் இருக்கிறாராம் புர்காராம். ஆனாலும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் புர்காராம் குணம் ஆவார் என்று நம்பி காத்திருக்கின்றனர்.